புதன், 14 ஜூலை, 2010

உரக்க உச்சரித்தால் மரண வாக்குமுலமாகி விடுமோ!!

11 ஜூலை 2006  அன்று நடந்த மும்பை இரயில் வெடிகுண்டு விபத்தின் பாதிப்பில் அப்போது எழுதிய  கவிதை...

http://en.wikipedia.org/wiki/11_July_2006_Mumbai_train_bombings



காலையில் புறப்படும் போது
கால்களை கட்டிக்கொண்டு
கண்ணை கசக்கிய
ஒன்றரை வயது - என்
குழந்தை வாசலில்
காத்திருப்பாளோ - என்
வருகைக்காக !!

வேலை முடிந்து
வீட்டுக்கு வரும்போது
வாங்கி வரும் இரண்டு
முழம் பூவினுள் தான்
இருக்கிறது எந்தன் உலகம்
என்பாளே என்னவள் -
எங்கே சென்று என்னை
தேடுவாள் !!

இரண்டு நாளாய்
வரும்போது வாங்கவேண்டும்
என்று நினைத்து
நினைத்து மறந்துவிட்ட
அந்த ஒற்றை
தலையாட்டிப் பொம்மையே
என் மகளுக்காக - இனி
வாங்கவே முடியாதோ !!

கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து சேர்த்து
சொந்தமாய் வீடு
கட்டவேண்டுமென்று
கண்ட கனவும்
காற்றோட போய்விட்டதோ !!

எனக்காக எதுவும் வேண்டாம்
என்று சொல்லி சொல்லியே
எந்த கனவும் தனக்காக காணாத
என்னவளுக்கு என்ன
கொடுக்கப்போகிறேன் இறுதியாய் !!

வாழ்க்கையேத்
தேடித்தேடியே பழகிவிட்ட
எனக்கு -
எந்தன் உடலையும்
தேடித்தான் கண்டுப்பிடிப்பார்களோ
எந்தன் உறவினர்கள் !!

சொல்லிக்கொண்டு
வருவதில்லை
மரணம் - ஆனால்
உயிருடன் உடலையும்
உரித்து எடுத்துச்செல்ல
உரிமை கொடுத்தது
யாருக்கு? 

என்னை இப்படி சிதைத்து
இங்கு வீசி எறிந்து
வேடிக்கை பார்க்கும் 
எந்தன் சகோதரர்களே 
இனியும் வேண்டாம்
இப்படி ஒரு
விளையாட்டு !!

எதைத் தேடி
இந்தப் பயணம்?

எதைச் சொல்லி
என்ன பயன்...

உயிர் பிரியும் தருணம்
உரக்க உச்சரித்தால்
மரண வாக்குமுலமாகி
விடுமோ என்ற
அச்சத்தில் -
நினைவு
மயங்கும் நொடியில்
தோன்றி மறைகிறது
எண்ணங்கள்

--மாதவன்








சனி, 3 ஜூலை, 2010

புதுமொழி வேண்டும்

இன்னும் இரு தினங்களில்
இனியதோர் நாள்
உதயமாகப்போகிறது - ஆம்
எந்தன் தேவதையின்
இந்த உலகம் பார்த்த
அந்நாளில்
அவளை வாழத்தவேண்டும்
ஆனால் -  அந்த
காதலுக்கு ஒரு காப்பியம்
கண்ட கம்பன் முதல்
உலகத்தேடலுக்கு ஓராயிரம் உரை
உறைத்த வள்ளுவன் வரை
எவனும் கண்டிராத
வார்த்தைகள் கொண்டு - அவளை
வர்ணிக்க வேண்டும்!


அகத்தியன் அவனின்
அகத்தினிலிருந்து தோன்றி
அணிகலன் கொண்டு
அலங்கரிக்கப்பட்ட அந்த
அழகுத்தமிழ் வார்த்தைகள்
வேண்டும் எனக்கு!


இன்னாநாற்பது,இனியவை நாற்பது,
இதனோடு காப்பியங்கள் ஐந்து,
அகநானூறு,புறநானூறு,
இரண்டோடு காவியங்கள் சில,
நற்றிணை,குறுந்திணையுடன்,
நாலாயிரதிவ்வியப்பிரபந்தம் முழுவதிலிருந்தும்,
நானறிந்த தமிழ் அனைத்திலிருந்தும்,
படித்தது,படித்ததில் அறிந்தது,
தேடியது,தேடியதில் திகட்டியது,
கற்றது,கற்றதில் நின்றது,
காற்றில் கரைந்தது,
காணமல் களவு போனது,
சுவற்றில் பதிந்தது,
ஏட்டில் எழுதியது,
எட்டுதிசையிலிருந்தும் எடுத்த
எந்த வார்த்தைகளைக் கொண்டு
எத்தனை வகையில் கோர்த்தாலும்  
என்னவளை ஏற்றி 
என்னால் கவி புனையமுடியவில்லை!


ஆண்டவன் அவனிடம் 
அறைகூவடுலிகிறேன் -  
எந்தன் காதலை புகழ்ந்து
என்னை கவிஞனாக்குமுன்
என்னவளை வர்ணிக்க
எனக்கு வார்த்தைகள் சில
வரமாய் கொடு!  
  
சுந்தர தமிழைக்   கொணர்ந்து
முதுமொழியில் அறம் கோர்த்து
முக்கனி சுவை சேர்த்து 
புதுமொழி ஒன்று 
பொங்கும் அமுதமாய் 
தித்திக்கும் ஊரணிகள் சில 
எந்தன் நெஞ்சில் 
சுரக்கச் செய் - நான்
கவி பாடவேண்டும்  - அவள் 
செவி குளிர ...........