செவ்வாய், 21 ஏப்ரல், 2009

உந்தன் முகம் தான் தெரிகிறதடி!!






தொட்டுப்பேசும் வண்ணத்துப்பூச்சி
பட்டுத்தெறிக்கும் நீர்த்துளி

பனித்துளியில் ஒருதுளி
பள்ளம் சேரும் மழைத்துளி


பருவமடையா நாணல்
பருவமடைந்த தென்னங்குருத்து


வானத்தில் படரும் வானவில்
வாடாத மலரின் நடுஇதழ்


கருவுற்றிருக்கும் மொட்டு
செறிவேற்றிருக்கும் மெட்டு

காதலுடன் பாடும் குயில்
காமத்துடன் ஆடும் மயில்


கவிதைச் சொல்லும் தென்றல்
தென்றல் தடவும் நாற்றங்கால்


தொட்டிலில் துயிலும் குழந்தை,
குழந்தை சிதறும் சிரிப்பு


அந்தி வானம் தொடும் ஆதவன்
ஆடாமல் அசையும் அவரை


சுற்றும் காற்று, சுழலும் நெருப்பு
படரும் கொடி, தொடரும் மேகம்


மேகம் தேடி ஒளியும் முழுமதி
மோகம் கொண்டு சீறும் நாகம்


காலையில் விழிக்கும் கதிரவன்
மாலையில் மலரும் மல்லிகைப்பூ


எங்கு பார்த்தாலும்...
எதில் தேடினாலும்...


எனைச் சுற்றி உள்ளவை யாவிலும்
உந்தன் முகம் தான் தெரிகிறதடி!!






செவ்வாய், 17 மார்ச், 2009

மழையில் நனைந்த மலர்...


மழையில் நனைந்த மலரின் மேல்
உருண்டோடும் துளியில் -
உன் முகம் பிம்பமாய்
மென்மைக்கு உதாரணமாய் -
வண்ணத்துடன் மலர்,
மலர் தாங்கும் மழைதுளி,
துளி சிந்தும் உன் முகம்,
முகம் சொல்லும் காதல்
சுடர்விடும்
உன் முகத்துக்கு
உவமையாய் தான் -
மழைதுளி கொஞ்சம் விட்டு
வருடும் வண்ணம் கோர்த்து
மயக்கும் அழகு சேர்த்து
மலர்ந்துள்ளதோ!
- மாதவன்

திங்கள், 16 மார்ச், 2009

பிடிச்சிருக்கு


"பிடிச்சிருக்கு"
நீ சொல்லும் இந்த
ஒற்றை வார்த்தைக்காக தான்

கடல் கூடும்
ஆற்றுத்தண்ணியிலிருந்து
கொஞ்சம்

உப்பு சேராத
ஊரணியிலிருந்து
கொஞ்சம்

தெப்பம் மிதக்கும்
திருக்குளத்திலிருந்து
கொஞ்சம்

ஆட்டம் போடும்
அருவியிலிருந்து
கொஞ்சம்

சேர்த்து சேர்த்து
ஆவியாக்கி

அதனுள் பொதிகைமலை
சாரல் கோர்த்து
அந்தி மழையாக்கி

அதிலிருந்து சிலதுளி
பிரித்தெடுத்து
வார்த்தைகளாக்கி
தெளித்துள்ளேன் - இந்த
பூக்களின் மீது . . .

- மாதவன்

சனி, 14 மார்ச், 2009

உதிரத்தில் கரைந்த கண்ணீர்





இரத்தம், யுத்தம், சத்தம் - நித்தம்
மரணத்தோடு போராடும்
இவர்களின் வாழ்க்கையை - இனி
இருண்டு போன விடியலில்தான்
தேடிப் பார்க்கவேண்டும்


உறைய மறந்து -
உடை நனைக்கும் குருதி
உணர மறந்து -
உடன் தவிக்கும் குழந்தை


சேயின் வலியின் கொடூரம்
தாயின் விழியில் தெரிகிறது


பெற்றபோது கண்ட
பிள்ளையின் எதிர்கால கனவு
கண்ணெதிரே கரைகிறது –
உதிரத்தில்


பாலும் தேனும் கலந்து
உயிரும் உணர்வும் ஊட்டி
பொத்தி பொத்தி வளர்த்தப்பிள்ளையின்
உடல் நனைகிறது - உதிரத்தில்.

"எறும்பை கூட
கடிக்க விட்டதில்லை
எம்பிள்ளையை - இப்போ
எலும்பொடிந்து இரத்தம் கொட்டுகிறதே!

எனது இரத்தம் முழுவதும்
இழந்தாவது - எனது
குழந்தையை காப்பாற்ற மாட்டேனா!!"

வலியினால் விசும்பியழும் குழந்தையை
அணைக்க கூட முடியாமல்
தவிக்கும் தாயின் புலம்பல் - உங்கள்
காதில் கேக்கிறதா?

அஃறினைக்கு கூட அங்கம், சங்கம் அமைத்து
அறியணை ஏறி உரிமம் கேட்கிறது
ஒரு கூட்டம் - இங்கு
அடிப்படை உரிமையைக்கூட
அடியொடு பிடிங்கி எறிந்திருப்பது - உங்களுக்கு
உண்மையிலேயே தெரியவில்லையா?


எவரிடம் சென்று புகாரிடுவது
எங்கே சென்று முறையிடுவது
எப்படி இதனை சீர்திருத்துவது
எவரேனும் அறிந்திருந்தால்
எடுத்துரைக்க அந்த
இறைத்தூதர்களை அனுப்பிவையுங்கள்

-கண்ணீருடன்
மாதவன்