திங்கள், 14 ஜூன், 2010

எப்படி பெண்ணே!


பெண்ணே....
என்னை விட்டு விலகும்போது
எந்தன் ஆறாவது அறிவையும்
ஏனடி எடுத்துச் சென்றாய்!

வேண்டாம் என்றுசொல்லிவிட்டு
வேண்டுமென்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கிறாயடி!
மறுத்தல்தான் பதில் என்றால்
மௌனமாய் இருந்தபோதே
மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பேனடி!
தோன்றுவது எல்லாம் முடிவில்
தோல்வியே தேடும் என்றால்
துவழாமல் இருப்பது எப்படி பெண்ணே!

ஞாயிறு, 13 ஜூன், 2010

எப்பொழுது வாழ்த்துவாய்


மௌனமானவளே -
வாழ்த்துகளை கூட வரைமுறைக்குள்
வைத்து தைத்துக்கொள்கிறாயடி -

காற்றோடு வந்து தான் உன் காதில்
கவிதை சொல்லவேண்டும் எனில்
காற்றினுள் கரைந்துவிடவும்
தவமிருப்பேனடி...

சுவாசமே வேண்டாமென்று - நீ
சரணம் பாடும்போது
சுவாசிக்க எப்படி தோன்றுமடி

மீண்டும் ஒருமுறை யோசித்துப்பாரடி -
காதலாய் ஏற்றுக்கொள்ளாவிடினும்
கவிதையாய் ரசித்துப்பாரடி....

சனி, 12 ஜூன், 2010

ஒரு தேடலின் விடை




உன்னைத்தேடி உன்னைத்தேடி
உயிரின் ஒரு பாதியை
உருக்கி விட்டேனடி....

ஊற்றின் உஷ்ணத்தை
உன்னுடைய முச்சுக்காற்றுக்கு
உவமேயம் செய்தேனடி - ஆனால்
உயிர்ப்பின் அவசியம்
உணர மறந்தேனடி...

தவத்தினை மெச்சி
தோன்றிய கடவுளிடம்
வரமாய் வேண்டும்
என்று உன்னை கேட்டால்
கைபிசைந்து நிற்கிறானடி...

ரகசியம் ஒன்று

தேவதையே....
 
உன்னிடம் சொல்லாத ரகசியமா....
உன்னிடம் சொல்ல முடியாமல்
ஒளித்து வைத்துகொள்ள
உயிரோட்டமாய் ரகசியம்
ஒன்று சொல்லடி...

 
உன்னை காதலிப்பது இல்லாமல்.

பெண்ணின் பருவங்கள்

குறிப்பு - சங்க காலத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது .அவைகள்  பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.
                  ஒவ்வொரு பருவமும்  முன்று வருடங்களை கொண்டது.  
ஒவ்வொரு பருவத்தைப் பற்றியும் சில வரிகளில்....  


பேதை அவள் தோன்றும் போதே
பெருமை சேர்க்கிறாள்
பிரிதொரு தோன்றலுக்கு
பிம்பமாய்...


பெதும்பை எனின் போதினும்
பொதிகைமலை தென்றலை
பொதியை சுமக்க
புதிதாய் பூக்கிறாளே...


மங்கை அவள்
மனதிற்குள் தேக்கிவைத்திருக்கிறாள்
மின்னல் ஒன்று
மழைசாரலோடு.
இதயத்தோடு இணைத்து
இணைத்து தைத்திருக்கிறாள்
இதமாய் தொடங்கும்
உதயம் ஒன்று...


மடந்தையும் -
மண்ணில் மவுனத்தோடு  
மறைத்து வைத்த
விதையும் -
வீரியமற்று தான் போய்விடுமா...
தளிர் விடாமல் தலைகுனியுமா...
தரணி பார்க்காமல் போய்விடுமா...


அரிவை அவள்
அன்று முதல்
அடங்கும் வரை
அடங்கியும் இருப்பாள்
அடக்கியும் பார்ப்பாள்


தெரிவை... தெரிவை...
ஆறாவது பருவத்தினுள்
ஆரவாரத்துடன் தான் நுழைகிறாள் -
அந்தி வானத்து அழகுடன்
அன்று மலர்ந்த மல்லிகையாய்
அர்த்தமுள்ள சிரிப்புடன்...


பேரிளம் பெண் -
பருவத்தினுள்
பக்குவப்பட்டது,
பாசத்திற்கு ஒரு 
வாசம் சேர்த்து 
கொடுத்துக் கொண்டேயிருக்கும்
அமுத சுரபியோ
அந்த பருவம்...


பெண் - சொற்களில்
அர்த்தங்கள் ஆயிரம்
ஆனால் - ஆதாரமே
அந்தச் சொல்தானோ?
  
தோன்றலில் - பெண்
தொடக்கத்தில் - பெண்
பாசத்தில் - பெண்
பணிவில் - பெண்
கனிவில் - பெண்
கருவில் - பெண்
அழிவில் - பெண்
ஆக்கத்தில் - பெண்
வெற்றியில் - பெண்
வீரத்தில் - பெண்
தோல்வியில் - பெண்


பெண்ணுக்கு பெண்தான்
உருவக அணியோ?


                           - மாதவன்