சனி, 3 ஜூலை, 2010

புதுமொழி வேண்டும்

இன்னும் இரு தினங்களில்
இனியதோர் நாள்
உதயமாகப்போகிறது - ஆம்
எந்தன் தேவதையின்
இந்த உலகம் பார்த்த
அந்நாளில்
அவளை வாழத்தவேண்டும்
ஆனால் -  அந்த
காதலுக்கு ஒரு காப்பியம்
கண்ட கம்பன் முதல்
உலகத்தேடலுக்கு ஓராயிரம் உரை
உறைத்த வள்ளுவன் வரை
எவனும் கண்டிராத
வார்த்தைகள் கொண்டு - அவளை
வர்ணிக்க வேண்டும்!


அகத்தியன் அவனின்
அகத்தினிலிருந்து தோன்றி
அணிகலன் கொண்டு
அலங்கரிக்கப்பட்ட அந்த
அழகுத்தமிழ் வார்த்தைகள்
வேண்டும் எனக்கு!


இன்னாநாற்பது,இனியவை நாற்பது,
இதனோடு காப்பியங்கள் ஐந்து,
அகநானூறு,புறநானூறு,
இரண்டோடு காவியங்கள் சில,
நற்றிணை,குறுந்திணையுடன்,
நாலாயிரதிவ்வியப்பிரபந்தம் முழுவதிலிருந்தும்,
நானறிந்த தமிழ் அனைத்திலிருந்தும்,
படித்தது,படித்ததில் அறிந்தது,
தேடியது,தேடியதில் திகட்டியது,
கற்றது,கற்றதில் நின்றது,
காற்றில் கரைந்தது,
காணமல் களவு போனது,
சுவற்றில் பதிந்தது,
ஏட்டில் எழுதியது,
எட்டுதிசையிலிருந்தும் எடுத்த
எந்த வார்த்தைகளைக் கொண்டு
எத்தனை வகையில் கோர்த்தாலும்  
என்னவளை ஏற்றி 
என்னால் கவி புனையமுடியவில்லை!


ஆண்டவன் அவனிடம் 
அறைகூவடுலிகிறேன் -  
எந்தன் காதலை புகழ்ந்து
என்னை கவிஞனாக்குமுன்
என்னவளை வர்ணிக்க
எனக்கு வார்த்தைகள் சில
வரமாய் கொடு!  
  
சுந்தர தமிழைக்   கொணர்ந்து
முதுமொழியில் அறம் கோர்த்து
முக்கனி சுவை சேர்த்து 
புதுமொழி ஒன்று 
பொங்கும் அமுதமாய் 
தித்திக்கும் ஊரணிகள் சில 
எந்தன் நெஞ்சில் 
சுரக்கச் செய் - நான்
கவி பாடவேண்டும்  - அவள் 
செவி குளிர ...........  
   

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

good one

அன்புடன் நான் சொன்னது…

நீங்க தேடும் சொல்..... கிடைத்ததும் அதையும் பதிவா போடுங்க ....
அது எந்த சொல்லுன்னு பார்க்கணும்.
கவிதிக்கு பாராட்டுக்கள்.

Madhavan சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க கருணாகரசு.